Saturday, 31 December 2011

புது வருட வாழ்த்துக்கள்

                                                          
                                           புது வருட வாழ்த்துக்கள் .....






Thursday, 29 December 2011

பிரிவு

பிரிவென்று எதைச் சொல்வாய்
இன்று வேண்டும் எனக்கு விளக்கம்
என்று கேட்டேன் என்மீது வந்து
மோதும் வசந்தக் காற்றை ...
  



வாதம் செய்யும் பூக்களில்
பாதம் பதித்து தேன் உண்டு
சுவடுகளை மட்டும்
கபடாய் விட்டுச்செல்லும்
வண்டிடம் கேள் என்றது காற்று




வண்டின் வாசல் தேடி
கண்டதுண்டோ பிரிவை நீ
என்று கேட்க உரைத்தது வண்டு
இவ்வாறு ....




மோதினாலும் உடையாத
கரையை நோக்கி காதலுடன்
கடலை விட்டு கள்ளத்தனமாய்
நொடிகளுக்கு ஒரு முறை
பிரிந்தோடும் அலைகளைக்கேள்
அழகாய்ச் சொல்லும் அப்பிரிவை என்று ....


கடல் நோக்கி நான் நடந்து
கண்ட அலையை வினவினால்
நிமிட நேரம் நுரை கக்கி
இரைச்சலுடன்  உரைத்தது
பின்வருமாறு ...




தினம் நோக்கும் சூரியனின்
இமை மூடும்  நேரத்தில்
இச்சைகளின் தொடர்ச்சியாய்
இங்கு வந்து என்னை
இம்சிக்கும் யாரிடமும் கேட்காதே
இக்கேள்வி ..



கணக்கற்ற கால்தடங்கள்
இணக்கமான இன்பப்பேச்சுகள்
கலந்தொருமித்த கண்கள்
கண்டு கொண்டே இருக்கிறேன் நான்
பிரிவென்பதை
கேட்க பிறிதோர் இடம்
பார் என்றபடி கடல் நோக்கி
ஓடியது  அலை ....




குறுமணல் கால் உரச
பாத அமிழ்வுகளின்
பதிவுகளை பின் திரும்பி
பார்த்துக்கொண்டே
நடந்தேன் நான் ....
பிரிவென்பதை யாரிடம் கேட்க




களைத்துப்போன கால்களின்
மௌனங்களின் ஆரம்பங்களில்
வந்து சேர்ந்தேன் என் இல்லம்
வாசலில் வெள்ளை பூக்கள்
சிரித்தன பூவிதழ் காட்டி




என்ன தெரியும் பிரிவு பற்றி உனக்கு
எதற்கு சிரிக்கிறாய் என்று
கேட்டால் சிரித்தபடி சொன்னது
வீட்டின் வரவேற்புக்கொடி...




உன் துக்கம் உள்ளம் அரிக்க
ஊரெல்லாம் போய்
உதவி தேடினாய்
கிடைத்தது என்ன என்று
மீண்டும் சிரித்தது முல்லைப்பூ ....



உள்ளம் உண்மை உரைக்குமோ என்று
கேட்டேன் மீண்டும் அக்கேள்வி
கேட்டுப்பார் என்றது பூ மீண்டும்
விசும்பல்களுடன் விடை தந்தது
விகசிக்கும் என் உள்ளம்



பிரிவென்பது கூடுபவர்களுக்கே
பிரிவென்பது உறவுகளுக்கே
பிரிவென்பது சந்திப்புகளின்
சரிவு என்பது நீ உணராயோ


சந்திப்புகளும் உறவுகளும்
தொலைத்தவருக்கு பிரிவில்லை
என்ன ஆயிற்று உனக்கு என்று
நகைத்தது என் உள்ளம்
கேட்டது என்னை ...


பளிங்காய் இருந்தாய்
பாசம் பிடித்துப்போனாய்
களிப்பாய் இருந்தாய்
காய்ந்து போன சருகானாய்
தெளிந்துதானே இருந்தாய்
கலைந்து போய் கருகிப்போனாய் ....
வினவியது  உள்ளம்
சிதறியது சிந்தை




பிரிவென்பது இதுதானா இதுவே
சரிவென்பது நிஜம்தானா என்று
கரித்துண்டுகளைத் தேடி
கவிதை எழுதுகிறேன் என்
மனச் சுவர்களில்
மீண்டும் மீண்டும் நான் .......

டிசம்பர் மழை ....



நீர்க்கம்பிகளைத்  தயாரிக்கும் வேகம் கூடி திசைமானியின் திருகல்களை குத்தகைக்கு எடுத்து பொழியத் துவங்கியிருக்கிறது வானம் ...

எச்சரிக்கைக் கூண்டுகளின் எண்கள் கூடக்கூட பரபரப்பாகிறது நகரம் ...

சில்லென்ற காற்றைத் தடை போட்டு முழுக்கச் சாத்தப்பட்ட ஜன்னல் கம்பிகளில் பிஞ்சுக்கைகள் .....

அடுத்த நாளில் தானே "தானே " கரைகடக்கும் என்று சேர்த்துவைத்த அழுக்கு ஆடைகள்.....

துளிகள் சொட்ட சொட்ட விரிந்து பரவும் குடைப்பூக்கள் .....

எரியாத தெரு விளக்குகளின் கீழே பொன் சங்கிலி மூடி அவசர நடையிடும் பெண்டிர்......

மார்கழியின் கோலங்களுக்கு தாற்காலிகத் தடை .....

"தானே" செல்லும் வரை தானே இவ்வளவும்....


















மாலை வணக்கம்